Friday, March 25, 2016

முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு அதிக சுய ஒழுக்கம் தேவை



முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தமது பதவிகளுக்கென்று இருக்கும் கௌரவத்தைக் காப்பற்றிக் கொள்வது அவசியம். ஒருவர் மீது ஒரு தனிபட்ட நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கைதான் அந்நிறுவனம் அவருக்கு வழங்கும் உயர் பதவிகளும் பொறுப்புகளும்

அப்படி வழங்கப்படும் ஒவ்வொரு பொறுப்புகளுக்கும் தனிபட்ட கௌரவம் மற்றும் மரியாதை உண்டு. வழங்கப்பட்ட அத்தகைய பொறுப்புகளிலிருந்து விலகும் வரை அதற்குரிய கன்னியத்தை காப்பாற்றுவது மிக முக்கியம்

நாம் வகிக்கும் பொறுப்பும், அந்த பொறுப்பில் இருந்து கொண்டு நாம் செய்யும் நன்மை தீமைகளும் நம்மை மட்டுமன்றி நமது நிறுவனத்தையும், அதில் பணியாற்றும் மற்ற ஊழியர்களையும் பாதிக்கும் என்பதே உண்மை.
மிக சமீபத்தில் கையும் களவுமாக பிடிபட்ட இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் உயர் அதிகாரி, அவருக்கு வழங்கப்பட்ட பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளது மிக வருந்தத்தக்கது

இந்த விவகாரம் குறித்து பல தரப்புகள் தங்களது தொடர் அதிருப்திகளைப் பதிவு செய்து வருகின்றனர். விளையாட்டு துறைக்கும் விளையாட்டாளர்களுக்கும் தேவையான பல்வேறு முகாம்களும், பயிற்சிகளும் பல முறை பட்ஜெட் பற்றாக்குறையை காரணம் காட்டி செயல்படுத்த முடியாமல் போனதாகவும் அன்மையில் செய்திகள் வெளிவந்தன

ஒரு முழு அமைச்சைச் சேர்ந்த தனி ஒரு மனிதனின் சட்டைப்பைக்குள் 100 மில்லியன் ரிங்கிட் பதுக்கப்பட்டுள்ளது என்பது எளிதில் நம்பிவிட முடியாது என்ற போதிலும் இதுவே உண்மை.

ஊழல் மற்றும் கையூட்டு நடவடிக்கைகள் தவறு என்று ஆங்காங்கே அறைக்கூவல் விடுத்து வரும் போதிலும் அமைச்சுகளில் இவை இன்னும் நடந்த வண்ணமாக இருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கவலையையும் உண்டாக்குகிறது

ஒவ்வொரு அமைச்சு, அரசாங்க சார்புடைய மற்றும் சார்பற்ற இயக்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் இவை அனைத்திலும் இத்தகைய சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருப்பதை அந்தந்த நிறுவனங்கள்தான் சுய சட்ட திட்டங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சரியான சட்ட திட்டங்கள் வரையப்படுவது மட்டுமல்லாமல் அவற்றை ஊழியர்கள் முறையாக பின்பற்றுவதையும் நிறுவன அதிகாரிகள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். 

அப்படி ஒரு வேளை குறிப்பிட்ட ஒருவர் விதிமுறைகளை மீறுவதோ அல்லது தவறிழைப்பதோ கண்டுபிடிக்கப்பட்டால் தகுந்த நவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும். 

இது மற்ற ஊழியர்களுக்கு கட்டாயம் ஒரு பாடமாக அமையும் என்பது திண்ணம். வருங்காலத்தில் இது பொன்ற தொழில் இட முறைக்கேடுகளைத் தவிர்க்க இத்தகைய சட்ட திட்டங்கள் அவசியம் உதவும் என எதிர் பார்க்கலாம்.   

No comments:

Post a Comment