Thursday, October 29, 2015

எஸ்.பி.ஆர்.எம் அறிமுகப்படுத்தும் நேரடி கலந்துரையாடல் சேவை




மக்கள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) மீது கொண் டிருக்கும் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிப்பதற்கும், நல்ல இரு வழி உறவை மேலோங்கச் செய்வதற்கும் நேரடி தொடர்பு திட்டத்தை அவ்வாணையம் அமைத்துள்ளது. 

ஏஸ் என்று அழைக்கப்படும் இந்த நேரடி தொடர்பு சேவை இவ்வாண்டு இறுதியில் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
எந்த ஒரு விளக்கம் கோரியும் மக்கள் அதிக நேரம் காத்திருப்பதை இந்த திட்டம் தவிர்க்க உதவுவது திண்ணம். 

இப்படி இணையம் வாயிலாக தொடர்பில் இருப்பதால் ஆணையம் வழங்கும் எல்லாத் தகவல்களும் உடனுக்குடன் மக்களைச் சென்றடையும் என்பதும் உண்மை.

தொடர்ந்து இந்த திட்டம் செயல்பாட்டில் இருப்பதால் எஸ்.பி.ஆர்.எம் குறித்து அநாவசிய நிஜமற்ற தகவல்கள் பரப்பப்படுவதையும் தடுக்க இயலும்.
 
மக்கள் மத்தியில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், ஐயப்பாடுகளுக்கும் தீர்வு உடனடியாக கிடைப்பாதால் மக்கள் அநாவசிய உண்மையற்ற செய்திகளை இனியும் நம்பமாட்டார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

Sunday, October 25, 2015

காப்பி கடை விவாதம் தீர்வுக்கு வித்திடாது!


ஒரு விஷயத்தின் நம்பகத்தன்மையை நாம் முழுமையாக ஆராய்கிறோமோ இல்லையோ, ஆனால் அதையொட்டி காப்பி கடைகளில் கமென்ட் அடிப்பதை இன்னமும் விட்டொழிக்கவில்லை நமது சமுதாயம்

காப்பி கடைகளில் அடிக்கப்படும் கமென்டுகளும், பாதியில் விட்டு வரும் சூடு ஆறிய காப்பி போல் தீர்வில்லாமலேயே போய் விடுகிறது.

ஒரு பிரச்சனையை கலந்து பேசி அதற்கு முடிவு காணும் நோக்கத்தில் அவை விவாதிக்கபடுவதில்லை, மாறாக நடக்கும் பிரச்சனைகளில் தமது கருத்துக்களை பதிவு செய்யவே பல காப்பி கடை விவாதங்கள் ஆரம்பமாகின்றன என்கிறார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) முன்னாள் துணை உயர் ஆணையர் டத்தோ ஶ்ரீ ஸக்காரியா ஜஃப்பார்.

எஸ்.பி.ஆர்.எம் மில் தமது 33 ஆண்டு கால சேவை காலத்தில் இது போன்ற பல காப்பி கடை விவாதங்களைத் தாம் கடந்து வந்துள்ளதாக கூறிய அவர், கையூட்டு தொடர்பான விஷயங்களை அலசும் போதும், இதுவே பொது மக்களில் பலரின் நடைமுறை வழக்கமாக உள்ளது என்றார்.

கடை வீதிகளில் அமர்ந்து வெறுமனே கருத்துகள் பேசுவதைக் காட்டிலும், கையூட்டில் சம்பந்தப்பட்டிருக்கும் நபர்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் அவற்றை தைரியமாக முன் வந்து எஸ்.பி.ஆர்.எம் மிடம் தெரிவிப்பதே சிறந்தது என்கிறார் ஸக்காரியா.

இப்படி ஊழல் குறித்து புகார் செய்வதாலோ அல்லது ஊழல் குறித்த சம்பவங்களுக்குச் சாட்சியாக இருப்பதாலோ தங்கள் பாதுகப்புக்கு பாதிப்பு நேர்ந்திடும் என பொதுமக்கள் அஞ்ச தேவையில்லை.

ஏனெனில் இவர்களை பாதுகாக்கும் சட்டதிட்டங்கள் வரையறுக்கபட்டுள்ளதாக கூறிய அவர், அந்த சட்டங்கள் கட்டாயம் அவர்களை பாதுகாக்கும் என்றார்.

இவர்கள் பாதுகாக்கப்படுவது நிச்சியம் என்று கூறிய அவர் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவது ஏஸ்.பி.ஆர்.எம் போன்ற அமைப்புகளின் கடமை என்றும் கூறினார்.

இதனிடையே லஞ்ச ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும், அவர்களது நம்பிக்கையை  மேலும் அதிகரிக்கவும் ஒரு வலுவான எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்திட வேண்டும் என ஸக்காரியா கூறினார்.

இந்த குழு தொடர்ந்தாற்போல் மக்களின் நம்பிக்கையை வளர்க்க பாடுபட வேண்டும்.

எஸ்.பி.ஆர்.எம் மேற்கொள்ளும் விசாரணைகளும், லஞ்சத்தை ஒழிக்க எடுக்கும் முயற்சிகளும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது இந்த குழுவின் முதல் பணியாக இருத்தல் வேண்டும் என்றார் அவர்.

தமது 33 ஆண்டு கால அனுபவத்தில், லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக செயல்படுவது எளிமையான காரியம் அன்று என்றார் அவர்.

கடமையை செய்கையில் பல வகையான எதிர்ப்புகளும், சவால்களும் பின் தொடரும். இருப்பினும் அவற்றை பொறுட்படுத்தாது எடுத்தக் காரியத்தை முடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என இன்றைய ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

உயர்மட்டம், அடிமட்டம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து நிலையில் உள்ள அதிகாரிகளும் நாணயத்தோடு செயல்பட வேண்டும் என்பதும் அவர் கருத்து.

செயலில் நாணயம் மற்றும் வேலையில் நேர்மையான ஈடுபாடு கொண்டிருப்பின் நிச்சியம் அனைத்து அதிகாரிகளும் தத்தம் கடமையை சரிவர செய்து முடிக்க முடியும் என ஸக்காரியா தெரிவித்தார்.

தனது சேவை காலம் முடிந்து தற்போது ஓய்வில் இருக்கும் அவர் இவ்வாறு தமது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


Tuesday, October 13, 2015

ஊழலை ஒழிப்பது ஒவ்வொருவரது கடமையும் தான்!

நான் ஒருவன் ஊழல் குறித்து புகார் செய்வதால் நாட்டில் ஊழலே இல்லாமல் செய்து விட முடியுமா என்ன?, என பலரும் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.

இருப்பினும் மாற்றம் என்பது தனி ஒரு மனிதனிடத்தில் இருந்துதான் பிறந்திட வேண்டும்.

இந்த சிந்தனை ஒவ்வொரு தனி மனிதனிடமும் தோன்றூம் போது, இது சமுதாய சிந்தனையாக உருமாறுகிறது என்பது மிகப் பெரிய உண்மை.

தனி மனிதனிடம் தோன்றும் விழிப்புணர்வும், மாற்றமும் தான், அவனது குடும்பத்தையும் பின் சமுதாயத்தையும் மாற்றுகிறது.

நான் ஊழலில் ஈடுபடாதிருந்தால் போதும், அடுத்தவன் என்ன செய்தால் எனக்கென்ன என்று இருந்து விடல் நிச்சயம் கூடாது.

மற்றவர் செய்யும் ஊழலினால்  பின் பாதிக்கப்பட போவது நமது ஒட்டு மொத்த சமுதாயமும், நாடும் தான்.

தவறாக கை மாற்றப்படும் பணமும், பதவி துஷ்பிரயோகமும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த தவறுவதில்லை என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இதையேதான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் துணை உயர் ஆணையர் டத்தோ ஶ்ரீ சக்காரியா ஜாஃபார் அவர்தம் கருத்தாக பதிவு செய்துள்ளார்.

மக்கள தயங்காமல் ஊழல் குற்றங்கள் குறித்து புகார் செய்ய முன்வர வேண்டும்.       

ஊழல் தடுப்பு அமைப்புகள் என்றுமே தனியே செயல்பட முடியாது.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் குறிப்பிட்ட விஷயங்களையோ அல்லது குற்றங்களையோ விரைவில் தீர்த்து விட உதவும்.

நாட்டின் ஒவ்வொரு அமைப்பும் நாட்டில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்கவே அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே. இருப்பினும் இந்த அமைப்புகள் சரியே செயல்படுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

சமீப காலமாகவே ஊழல் தொடர்பான பிரச்சனைகள் நாட்டில் தொடர்ந்து தலை தூக்கி வருவதும், பின்னர் அவற்றில் பல சட்டத்தின் முன் கொண்டு செல்லப்பட்டு தண்டனைப் பெற்று தரப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இருப்பினும் இவை அனைத்தும் ஊழல் குற்றங்களை  முற்றாக துடைத்தொளிக்க உதவவில்லை என்ற போதிலும் அவற்றை  குறைக்க முந்தைய தண்டனைகள் வழி செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.

சமுதாயத்தில் நடக்கும் பெரும் பகுதி ஊழல் குற்றங்களை மக்கள் அறிந்திருக்கின்றனர். அவற்றை அவர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம்  புகார் செய்ய வேண்டும்.

அப்படி புகார் செய்வதன் மூலம் அந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள்.

இத்தகைய விஷயங்கள் அடுத்து அதே குற்றத்தைச் செய்யத் துணியும் தரப்பினருக்கு நல்லதொரு பாடமாக அமையும்.

சமுதாயத்தில் நடக்கும்  இத்தகைய ஊழல் குற்றங்களை வேரோடு அறுத்தெடுக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மட்டுமே என்ற தவறான கண்ணோட்டத்தை விட்டொழித்து, இது என் பொறுப்பும் கூட என ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயம் உணர வேண்டும்.

இதுவே நல்லதொரு மாற்றமாக அமையும். 







Wednesday, October 7, 2015

ரிஞ்சிங் தோட்ட தமிழ்ப்பள்ளியில் ஊழல் குறித்த விழிப்புணர்வு முகாம்

செப்டம்பர் 30 ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சிலாங்கூர் செமிஞ்சி ரிஞ்சிங் தோட்ட தமிழ்ப்பள்ளியில் நடத்திய ஊழல் தடுப்பு முகாம் குறித்து தமிழ் நேசன் பத்திரிக்கையில் வெளியான செய்தி

சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியை அடுத்து ரிஞ்சிங் தோட்ட தமிழ்ப்பள்ளி.....




பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியை அடுத்து சிலாங்கூரில் அமைந்துள்ள ரிஞ்சிங் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 
 
சிலாங்கூரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எஸ்.பி.ஆர்.எம்) முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஊழல் விழிப்புணர்வு முகாமில் அப்பள்ளியின் ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டுகளைச் சேர்ந்த 164 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு புரியும் வண்ணம் ஊழலின் கேடுகளை எடுத்துரைக்கும் முயற்சியாக இது அமைந்திருந்தது.

இதனைத் தவிர்த்து ஊழல் தொடர்பாக ஆசிரியர்களுக்கான சிறப்பு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.

பொதுவான ஊழல் குறித்த விஷயங்களைத் தவிர்த்து ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த ஐயப்பாடுகளுக்கும் எஸ்.பி.ஆர்.எம் மைச் சேர்ந்த அதிகாரிகள் விளக்கமளித்தனர்.  

எஸ்.பி.ஆர்.எம் மின் பொதுமக்கள் கல்வி பிரிவு இயக்குநர் டத்தோ ஷம்சுன் பஹ்ரின் மாட் ஜாமில் இந்த முகாமை தொடக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார். 

தொடர்ந்து வரக்கூடிய காலங்களில் அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் இந்த முகாம் நடத்தப்படும் என சிறப்புரையின் போது டத்தோ ஷம்சுன் கூறினார். 

இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து பெறப்பட்ட 51 கல்வி தொடர்பான ஊழல் குற்றங்கள் குறித்த தகவல்களில் ஐந்து தமிழ்ப்பள்ளியுடன் தொடர்புடையது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பலமொழிக்கு ஒப்ப எல்லா நல்ல பழக்க வழக்கங்களையும்  குழந்தைப் பருவம் முதல் கொண்டே புகட்டுவது அவசியம். 

அந்த வகையில், ஊழல், கையூட்டு, பண மோசடி முதலியவை கடுங்குற்றங்கள் என்ற விழிப்புணர்வை மாணவர்கள்  மத்தியில் விதைப்பது இந்த முகாமின் அடிப்படை நோக்கம்.

நேர்மையான, ஊழலற்ற மற்றும் பொறுப்பான சமுதாயமே அரோக்கியமான சமுதாயம் என்ற தெளிவான எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் வளரச் செய்வதும் இம்முகாமின் நோக்கங்களுள் அடங்கும். 

மாணவர்களிடையே கூறப்படும் விஷயங்கள் எளிதில் அவர்களின் நண்பர்களையும், குடும்பத்தினரையும் சென்றடையும் என்பதால், இவர்கள் மூலம் சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்துகள் பகிரப்படுகின்றன.

இத்தகைய நல்ல முயற்சி அவசியம் தொடரப்பட வேண்டும்.