Wednesday, October 7, 2015

சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியை அடுத்து ரிஞ்சிங் தோட்ட தமிழ்ப்பள்ளி.....




பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியை அடுத்து சிலாங்கூரில் அமைந்துள்ள ரிஞ்சிங் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 
 
சிலாங்கூரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எஸ்.பி.ஆர்.எம்) முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஊழல் விழிப்புணர்வு முகாமில் அப்பள்ளியின் ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டுகளைச் சேர்ந்த 164 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு புரியும் வண்ணம் ஊழலின் கேடுகளை எடுத்துரைக்கும் முயற்சியாக இது அமைந்திருந்தது.

இதனைத் தவிர்த்து ஊழல் தொடர்பாக ஆசிரியர்களுக்கான சிறப்பு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.

பொதுவான ஊழல் குறித்த விஷயங்களைத் தவிர்த்து ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த ஐயப்பாடுகளுக்கும் எஸ்.பி.ஆர்.எம் மைச் சேர்ந்த அதிகாரிகள் விளக்கமளித்தனர்.  

எஸ்.பி.ஆர்.எம் மின் பொதுமக்கள் கல்வி பிரிவு இயக்குநர் டத்தோ ஷம்சுன் பஹ்ரின் மாட் ஜாமில் இந்த முகாமை தொடக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார். 

தொடர்ந்து வரக்கூடிய காலங்களில் அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் இந்த முகாம் நடத்தப்படும் என சிறப்புரையின் போது டத்தோ ஷம்சுன் கூறினார். 

இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து பெறப்பட்ட 51 கல்வி தொடர்பான ஊழல் குற்றங்கள் குறித்த தகவல்களில் ஐந்து தமிழ்ப்பள்ளியுடன் தொடர்புடையது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பலமொழிக்கு ஒப்ப எல்லா நல்ல பழக்க வழக்கங்களையும்  குழந்தைப் பருவம் முதல் கொண்டே புகட்டுவது அவசியம். 

அந்த வகையில், ஊழல், கையூட்டு, பண மோசடி முதலியவை கடுங்குற்றங்கள் என்ற விழிப்புணர்வை மாணவர்கள்  மத்தியில் விதைப்பது இந்த முகாமின் அடிப்படை நோக்கம்.

நேர்மையான, ஊழலற்ற மற்றும் பொறுப்பான சமுதாயமே அரோக்கியமான சமுதாயம் என்ற தெளிவான எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் வளரச் செய்வதும் இம்முகாமின் நோக்கங்களுள் அடங்கும். 

மாணவர்களிடையே கூறப்படும் விஷயங்கள் எளிதில் அவர்களின் நண்பர்களையும், குடும்பத்தினரையும் சென்றடையும் என்பதால், இவர்கள் மூலம் சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்துகள் பகிரப்படுகின்றன.

இத்தகைய நல்ல முயற்சி அவசியம் தொடரப்பட வேண்டும்.



No comments:

Post a Comment