Sunday, October 25, 2015

காப்பி கடை விவாதம் தீர்வுக்கு வித்திடாது!


ஒரு விஷயத்தின் நம்பகத்தன்மையை நாம் முழுமையாக ஆராய்கிறோமோ இல்லையோ, ஆனால் அதையொட்டி காப்பி கடைகளில் கமென்ட் அடிப்பதை இன்னமும் விட்டொழிக்கவில்லை நமது சமுதாயம்

காப்பி கடைகளில் அடிக்கப்படும் கமென்டுகளும், பாதியில் விட்டு வரும் சூடு ஆறிய காப்பி போல் தீர்வில்லாமலேயே போய் விடுகிறது.

ஒரு பிரச்சனையை கலந்து பேசி அதற்கு முடிவு காணும் நோக்கத்தில் அவை விவாதிக்கபடுவதில்லை, மாறாக நடக்கும் பிரச்சனைகளில் தமது கருத்துக்களை பதிவு செய்யவே பல காப்பி கடை விவாதங்கள் ஆரம்பமாகின்றன என்கிறார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) முன்னாள் துணை உயர் ஆணையர் டத்தோ ஶ்ரீ ஸக்காரியா ஜஃப்பார்.

எஸ்.பி.ஆர்.எம் மில் தமது 33 ஆண்டு கால சேவை காலத்தில் இது போன்ற பல காப்பி கடை விவாதங்களைத் தாம் கடந்து வந்துள்ளதாக கூறிய அவர், கையூட்டு தொடர்பான விஷயங்களை அலசும் போதும், இதுவே பொது மக்களில் பலரின் நடைமுறை வழக்கமாக உள்ளது என்றார்.

கடை வீதிகளில் அமர்ந்து வெறுமனே கருத்துகள் பேசுவதைக் காட்டிலும், கையூட்டில் சம்பந்தப்பட்டிருக்கும் நபர்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் அவற்றை தைரியமாக முன் வந்து எஸ்.பி.ஆர்.எம் மிடம் தெரிவிப்பதே சிறந்தது என்கிறார் ஸக்காரியா.

இப்படி ஊழல் குறித்து புகார் செய்வதாலோ அல்லது ஊழல் குறித்த சம்பவங்களுக்குச் சாட்சியாக இருப்பதாலோ தங்கள் பாதுகப்புக்கு பாதிப்பு நேர்ந்திடும் என பொதுமக்கள் அஞ்ச தேவையில்லை.

ஏனெனில் இவர்களை பாதுகாக்கும் சட்டதிட்டங்கள் வரையறுக்கபட்டுள்ளதாக கூறிய அவர், அந்த சட்டங்கள் கட்டாயம் அவர்களை பாதுகாக்கும் என்றார்.

இவர்கள் பாதுகாக்கப்படுவது நிச்சியம் என்று கூறிய அவர் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவது ஏஸ்.பி.ஆர்.எம் போன்ற அமைப்புகளின் கடமை என்றும் கூறினார்.

இதனிடையே லஞ்ச ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும், அவர்களது நம்பிக்கையை  மேலும் அதிகரிக்கவும் ஒரு வலுவான எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்திட வேண்டும் என ஸக்காரியா கூறினார்.

இந்த குழு தொடர்ந்தாற்போல் மக்களின் நம்பிக்கையை வளர்க்க பாடுபட வேண்டும்.

எஸ்.பி.ஆர்.எம் மேற்கொள்ளும் விசாரணைகளும், லஞ்சத்தை ஒழிக்க எடுக்கும் முயற்சிகளும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது இந்த குழுவின் முதல் பணியாக இருத்தல் வேண்டும் என்றார் அவர்.

தமது 33 ஆண்டு கால அனுபவத்தில், லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக செயல்படுவது எளிமையான காரியம் அன்று என்றார் அவர்.

கடமையை செய்கையில் பல வகையான எதிர்ப்புகளும், சவால்களும் பின் தொடரும். இருப்பினும் அவற்றை பொறுட்படுத்தாது எடுத்தக் காரியத்தை முடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என இன்றைய ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

உயர்மட்டம், அடிமட்டம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து நிலையில் உள்ள அதிகாரிகளும் நாணயத்தோடு செயல்பட வேண்டும் என்பதும் அவர் கருத்து.

செயலில் நாணயம் மற்றும் வேலையில் நேர்மையான ஈடுபாடு கொண்டிருப்பின் நிச்சியம் அனைத்து அதிகாரிகளும் தத்தம் கடமையை சரிவர செய்து முடிக்க முடியும் என ஸக்காரியா தெரிவித்தார்.

தனது சேவை காலம் முடிந்து தற்போது ஓய்வில் இருக்கும் அவர் இவ்வாறு தமது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


No comments:

Post a Comment