காலஞ்சென்ற அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அந்தோநி கெவின் மொராயிஸின் பெயரையும் புகழையும் வருங்கால சந்ததியினர் மறந்து விடாமல் இருக்க தலைநகரில் அமைந்துள்ள மலேசிய ஊழல் தடுப்பு அக்கெடெமி (MACA) வின் கற்பனை நீதிமன்றத்திற்கு அவருடைய பெயர் சூடப்பட்டுள்ளது.
இனி அது கேவின் மொராயிஸ் கற்பனை நீதிமன்றம் என்று அழைக்கப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) உயர் ஆணையர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கெவினின் அர்பணிப்பையும், தொழில் மீது அவர் வைத்திருந்த பற்றையும் நினைவுக்கூறும் வகையில் எதிர்வரும் அக்டோபர் முதலாம் தேதி எஸ்.பி.ஆர்.எம் மின் 48 ஆவது பிறந்தநாளையொட்டி சிறு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் அமலாக்க பிரிவு துணை ஆணையர் டத்தோ ஶ்ரீ ஷுக்ரி அப்துல் தெரிவித்தார்.
MACA- வில் அடிப்படை பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு சட்டம் மற்றும் வழக்குகள் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக இந்த கற்பனை நீதிமன்றம் உறுவாக்கப்பட்டது .
இதனிடையே எஸ்.பி.ஆர்.எம் தரப்பில் கெவின் ஆஜராகியிருந்த வழக்குகள் குறிப்பாக இராணுவ மருத்துவ அதிகாரி சம்பந்தப்பட்ட வழக்கு எஸ்.பி.ஆர்.எம்- மின் மற்றுமொரு துணை வழக்கறிஞரால் வாதாடப்படும், என ஷுக்ரி குறிப்பிட்டிருந்தார்.
கெவினின் இழப்பு எஸ்.பி.ஆர்.எம் மற்றும் நாட்டிற்கே ஏற்பட்டிருக்கும் பேரிழப்பாக கருதப்படும் போதிலும், தொடர்ந்து இது எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் தத்தம் கடமைகளை செய்வதிலுருந்து நிச்சயம் தடுக்காது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment