Wednesday, July 22, 2015

ஆரூடங்கள் தேவையில்லை, நம்பிக்கை வைத்து விசாரணைக்கு வழி விடுங்கள்

சமீபத்தில் 1.எம்.டி.பி விவகாரம் நமது நாட்டு மக்களை மட்டுமின்றி உலகின் பார்வையையே மலேசியாவின் பக்கம் திருப்பியது அனைவரும் அறிந்ததே.

அனைவரின் கவனத்தையும் இவ்விவகாரம் சுண்டி இழுத்ததற்கான இரு முக்கிய காரணங்கள், ஒன்று, இதில் சம்பந்தப்பட்டிருக்கும் உயர் அந்தஸ்த்துகுரிய நபர், மற்றுமொன்று இதில் களவாடப்பட்டதாக நம்பப்படும் அதிகமான பணம்.

ஆகவே தான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்த்தாற் போல் 1எம்.டி.பி விவகாரத்தில் தனி ஈடுபாடு காட்டி வருகின்றன.

இன்றைய நவீன வளர்ச்சி மயத்தில் நாடு எதிர் நோக்கியுள்ள  மிக பெரிய சவால் மிகுந்த பிரச்சனையாக இது வலம் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக நாட்டில் நடந்துள்ள பிரச்சனைகளைப் பின்நோக்கி பார்க்கையில் பி.எம்.எப், பெர்வாஜா மற்றும் பி.கே.எப்.ஸீ வழக்கு விசாரணைகள் அத்துனை எளிதில் மக்கள் நினைவிலிருந்து நீங்கியதாக தெரியவில்லை.

இருப்பினும் கடந்து போன இந்த வழக்குகள் அவ்வளவாக மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாததன் காரணம் இன்று இருப்பதைப் போன்ற நவீன தகவல் ஊடக வசதிகள் அன்று  இல்லாததே ஆகும்.

இயல்பாகவே சாதாரன வழக்குகளைக் காட்டிலும் உயர் அந்தஸ்த்துகளில் இருப்பவர்களைச் சம்பந்தப்படுத்திய வழக்குகள் அதிக நாட்டத்தை ஏற்படுத்தும். 

அதிலும் குறிப்பாக இந்த விசாரணையில் பலரும் தத்தம் விருப்பங்களுக்கு ஏற்றவாறு எக்கச்சக்கமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

1.எம்.டி,பி விவகாரங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவும் இந்த தரப்பினரின் விமர்சனங்களுக்கு விதிவிலக்கல்ல.

பலர் இந்த சிறப்பு பணிக்குழு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளனர். இப்பணிக்குழு ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாகவும், சுயேற்சையாக செயல்படுவதில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகின்றன.  

அடிப்படையில் பல அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சாரா இயக்கங்களைச் சார்ந்த பலரின் குற்றச்சட்டுகள் மீண்டும் மீண்டும் சிறப்பு பணிக்குழுவின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதுடன், குறிப்பிட்ட தரப்பினர் பதவி விலக வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.

சிறப்பு பணிக்குழு மட்டுமின்றி தேசிய கணக்காய்வகம் (பி.ஏ.சி) மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் பாய்கின்றன.

நாடு மற்றும் அதன் மக்கள் நலன் கருதி உறுவக்கப்பட்ட அடிப்படை சட்ட திட்டங்கள் மீது நாமே நம்பிக்கை இழந்திருப்பது விமர்சனங்களுக்கு அப்பால் கடும் வேதனைக்குரிய விஷயம் .

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் மற்றும் விசாரணை நடத்தும் தரப்பு ஆகியவற்றிற்கான அடிப்படை வேறுப்படுகளைப் பகுத்தறிய கூடிய மனப்பக்குவம் பலருக்கு இல்லை என்பது வேதனையிலும் வேதனை.

1.எம்.டி.பி விசாரணையில் இது தெளிந்த நீரோடைப் போன்று தெள்ளத் தெளிவானது.

தேசிய வங்கி, அரச மலேசிய போலீஸ்படை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் தேசிய வழங்குறைஞர் ஆகியவற்றை உள்ளடக்கியதே 1 எம்.டி.பி யை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு.

இதே தரப்பினர் வெவ்வேறு பணிக்குழுவின் மூலம் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர்களை உட்படுத்திய பல்வேறு குற்றச்சட்டுகளை விசாரித்துள்ளனர் என்பதும், அவற்றில் சில நீதியின் முன் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பதையும் மக்கள் மறந்திருக்க முடியாது.

அன்றைய சூழ்நிலையில் சரிவர தனது கடமைகளைச் செய்ய முடிந்த இதே தரப்பினரை உள்ளடக்கிய பணிக்குழு இன்று மட்டும் தனது கடமையிலிருந்து எப்படி பின்வாங்கும்?

அன்று இக்குழுவின் நம்பகத்தன்மை மற்றும் கடமை தவறாமைக் குறித்து எவரும் கேள்வி எழுப்பியதுமில்லை.

அதே போன்று எல்லா விசாரணையின் போதும் விசாரிக்கும் தரப்பின் மீது நம்பிக்கைக் கொள்வது அவசியம்.

இந்த நம்பிக்கை விசாரிக்கப்படும் விவகாரத்திற்கும், தனி ஒரு மனிதனுக்கும் தொடர்புடைய சாதக பாதகங்களுக்கு அப்பாற்பட்டு இருப்பது மிக அவசியம். 

தத்தம் கருத்துகளைச் சுதந்திரமாக பரிமாற்றிக் கொள்ள தங்கு தடையற்ற பூமியில் நாம் வாழ்வது உண்மையெனினும், அக்கருத்துக்கள் அவதூறுகளாகவும், அடிப்படைத்தன்மையற்றதாகவும் இல்லாதிருப்பது மிக அவசியம்.

1எம்.டி.பி விவகாரத்திலும் விசாரணைக் குழுவிற்கும் தேசிய கணக்காய்வகத்திற்கும் விசாரிப்பதில் தனிப்பட்டச் சுதந்திரம் வழங்க வேண்டியது அவசியம்.

இவ்விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கும் சில தரப்பினர் அம்முயற்சியை உடனடியாக கைவிடுவதே சாலச்சிறந்தது.

இதுவே நியாமான விசாரணைக்கு வழி வகுக்கும்.





No comments:

Post a Comment