Wednesday, July 29, 2015

அநாவசிய குற்றச்சாட்டுகள் விசாரணையைத் தாமதமாக்கும்

தனிப்பட்ட அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதைக் காட்டிலும் முக்கியம் அத்தகைய அமைப்புகளுக்கு விசாரணையை வழி நடத்த தகுந்த அவகாசம் வழங்குவது.

விசாரணை சரியாக நடத்தப்பட வேண்டுமாயின் இடை இடையில் புகுந்து குட்டையை குழப்புவதை சில தரப்பினர் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி அடிக்கடி கூறப்படும் கருத்துகள் வெளிப்படையான கருத்துச் சுதந்திரத்தை பிரதிபலிக்கும் போதிலும் அவை தொடர் விசாரணைக்கு பெருந்தடையாக அமைவது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நாட்டில் பெரும் பகுதியினர் பேசிப் பேசிப் களைத்துப் போன ஒரு விஷயம், 1.எம்.டி.பி விவகாரம். களைத்த பின்னரும் பேசுவதை விடாது தொடருகின்றனர் சில தரப்பினர். 

சுயேட்சையாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் சிலர் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வரும் போதிலும்,இவை அனைத்தும் கண் துடைப்பு வேலைகள் என கோஷம் இட்டு வெறும் வதந்திகளைப் பரப்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

சிலரைப் பிடித்து விசாரணை நடத்துகின்றனர் சுயேட்சைக் குழுவினர், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். சில சமயங்களில் ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர். இவற்றில் எது சட்டத்திற்கு உட்படாமல் நடக்கிறது?

விசாரணை என்று வரும் பொழுது சம்பந்தப்பட்டவர்களை ஒவ்வொருவராக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விசாரிப்பது தான் முறை. அதுவே இப்போது நடந்து வருகிறது.  

இதுவரையில் இந்த விவகாரத்தில் பிடிப்பட்டவர்கள் வெறும் நெத்திலி மீன்களே, சுராக்களை அல்லவா பிடிக்க வேண்டும் என பலரும் அரைகூவல் விடுத்து வருகின்றனர். 

எந்த ஒரு விசாரணையிலும் நெத்திலி மீன், சுரா மீன் என தடுத்து வைக்கப்பட்டவர் பிரிக்கப்படுவது இல்லை. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட விசாரணைக்கு உதவுபவர்களாகவே அமைவர். 

சில சமயங்களில் நெத்திலி மீன்கள் எனக் கருதப்படும் தரப்பினரே விசாரணையின் பெரும் புள்ளிகளாக இருப்பர். இவர்களே அடுத்தக் கட்ட விசாரணைக்கு பெரும் பங்காற்றுபவர்களாகவும் அமைவர். 

ஆக 1 எம்.டி.பி விவகாரத்தில் இப்படி பிரித்துப் பார்க்க  வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இந்த விசாரணை தொடர்ந்து சரியாக நடத்தபட வேண்டுமாயின் அனைவரும் விசாரணை முடியும்  வரை சற்று மௌனம் காப்பதே சாலச் சிறந்தது. இதுவே விசாரணை விரைவில் முடியவும் வழி வகுத்துக் கொடுக்கும். 



No comments:

Post a Comment