Monday, May 16, 2016

வெள்ளத்திற்கு காரணம் ஊழலா?



கடந்த வாரம் நாட்டை உழுக்கி எடுத்த கடும் மழையால் தலை நகரில் பல முக்கிய சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. ஜாலான் பங்சார், ஜாலான் செமந்தான், ஜாலான் பந்தாய் பாரு, ஜாலான் புடு,  ஆகிய சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்து போயிருந்தது.

இது போன்ற நிலை தலைநகரில் ஏற்படுவது மிக அரிது. ஆகவே இச்சம்பவம் பல தரப்பினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.  

இதனிடையே இது போன்ற வெள்ள நிலை ஏற்படுவதற்கு தலைநகரில் துரித வளர்ச்சி கண்டு வரும் மேம்பாட்டு திட்டங்களில் ஊழல் நடந்திருப்பது காரணமாக அமைந்திருக்கலாம். ஆகவே ஊழல் தொடர்பான விசாரணை அவசியம் என துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.  

சம்பந்தபட்ட தரப்பு உடனடியாக இதில் புதைந்திருக்கும் ஊழல் குற்றம் குறித்து முழு விசாரணை அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் அறைக்கூவல் விடுத்திருந்தார்.

ஊழல் குற்றங்கள் குறித்த விசாரணைகள் அனைத்தும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (எம்,.ஏ.சி.சி) – யுடன் தொடர்புடையதாக இருக்கும்.

இதனிடையே எம்.ஏ.சி.சியின் விசாரணைக்குழு இயக்குநர் டத்தோ அஸாம் பாக்கி இந்த சம்பவம் குறித்து கருத்துரைக்கையில், தகுந்த ஆதாரங்களுடன் எம்.ஏ.சி.சி யிடம் யாரேனும் புகார் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்க தமது தரப்பு தயாராக இருப்பதாக கூறினார்.  

இந்நிலையில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான (டி.பி.கே.எல்) எம்.ஏ.இ.சி யுடன் தொடர்ந்த ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.

நாட்டின் பல நிலைகளில் ஊழல் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது, மேம்பாட்டு திட்டங்களும் இதற்கு விதிவிலக்கல்ல என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முறையான வழியில் மேம்பாட்டு திட்டங்களுக்கான குத்தகைகளை எடுக்க தவறிய சில நிறுவனங்கள் இத்தகைய ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும் தாமே ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் சில நிறுவனங்கள் வெறும் பணத்தைக் கொடுத்து அதிகாரிகளை விலைக்கு வாங்கியிருக்கலாம் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஊழல் எங்கு, எந்த நிலையில் நடந்திருப்பினும், இது உடனடியாக களையப்படாவிட்டல் நாடு இன்னும் மோசமான பல விளைவுகளை
சந்திக்கவேண்டியிருக்கும் என்பது திண்ணம்.

ஒருவேளை பலர் சந்தேகிப்பது போன்று மேம்பாட்டு திட்டங்களில் ஊழல் நடந்திருப்பது உண்மையெனில், அது குறித்த தகவல்கள் அல்லது ஆதாரங்கள் தெரிந்து வைத்திருப்பவர்கள் தைரியமாக எம்.ஏ.சி.சி யிடம் புகார் செய்துவிடல் நன்று.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பும் மிக அவசியம்.



No comments:

Post a Comment